டெலிகாம் மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் பெரிய மாற்றம் ஒன்று அமலாக உள்ளது. மத்திய அரசு, வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை போன்ற மெசேஜிங் செயலிகளை இனி சிம் கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.
இதுவரை, ஒரு முறை சிம் கார்டு மூலம் பதிவு செய்த பின், அந்த சிம் இல்லாமல் WiFi அல்லது வேறு எண்ணிலிருந்து கூட செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது. ஆனால், இந்த வசதி சைபர் குற்றவாளிகளுக்கு மோசடி செய்ய வாய்ப்பாக அமைந்து விட்டது. குறிப்பாக, WiFi மூலம் சிம் இல்லாமல் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் கடந்த காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன.
இதனைத் தடுக்கும் நோக்கில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகளின் திருத்தங்கள், நவம்பர் 28, 2024 அன்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன.
புதிய விதி
- வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை மொபைலில் சிம் கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது.
- சிம் கார்டை எடுத்துவிட்டால், அந்த சாதனத்தில் வாட்ஸ்அப் செயல்படாது.
- செயலி 6 மணி நேரத்துக்கு ஒரு முறை தானாக லாக்அவுட் ஆகும்.
- மீண்டும் பயன்படுத்த, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து சரிப்பாடு (verification) செய்ய வேண்டும்.
மேலும், அரசு உத்தரவின்படி, புதிய பயனாளிகளின் தகவல்களை செயலி நிறுவனங்கள் 4 மாதங்களுக்குள் தொலைத்தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சைபர் பாதுகாப்பை உயர்த்துவதோடு, அடையாளம் தெரியாத மோசடி நபர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய படியாக கருதப்படுகிறது. அனைத்து மெசேஜிங் செயலி நிறுவனங்களும், அடுத்த 90 நாட்களுக்குள் இந்த புதிய முறையை நிறுவி விட வேண்டும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.



